Tuesday, April 8, 2014

ஊன் லைசின் ஃபோனோகிரஃபிக் (1999, ஃபிரன்ஸ்)



இந்த படத்தின் பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் வருவது ‘’ஒரு ஆபாசமான தொடர்பு’’. ஆபாசம் என்ற வார்த்தை சற்று ஆபாசமாக இருப்பதால் நாம் இதை சற்று மாற்றிக் கொள்வோம்.-’’ஊடலினால் உண்டாகும் உறவு’’. எனக்கு ஃபிரெஞ்ச் தெரியாது. ஆனால் இப்படத்தை பார்த்தபின் “ஊடலினால் உண்டாகும் உறவு” என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

நத்தாலி (Natalie) மற்றும் செர்ஜி (Sergi)-யை தனித்தனியே ஒருவன் பேட்டி எடுக்கின்றான். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இப்பேட்டி வருகிறது. இடையிடையே ஃபிளாஸ்பேக்கில் (Flashback) அவர்கள் இருவரும் எப்படி சந்தித்தனர், என்ன செய்தனர், அவர்கள் உறவு என்ன ஆனது என்று சொல்லி கதை நகருகிறது.

உடலுறவில் பல கற்பனைகள் (Fantasy) கொண்ட நத்தாலி ஒரு பத்திரிக்கையில் அவளின் கற்பனை பற்றி விளம்பரம் கொடுக்க அதை பார்த்த செர்ஜி அவளை தொடர்பு கொள்கிறான்.



பெயர், என்ன தொழில் செய்கிறார்கள், சமுதாயத்தில் அவர்களின் நிலை, குடும்பநிலை, எங்கு வசிக்கிறார்கள் என்ற எந்த விவரங்களையும் அவர்களுக்கிடையே பகிராமல் (நமக்கும் பகிராமல்) தொடர்ந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சந்தித்து தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

பொதுவாக காதலில் உண்டான உறவு ஊடலில் முடியும். ஆனால் இங்கு ஊடலில் ஆரம்பித்து காதலில் முடிகின்ற வேளையில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்தில் அவர்களிடையே ஒரு மனமாற்றத்தை உண்டாக்குகிறது.

அச்சம்பவம் திகிலூட்டும்படியாகவோ, அதிர்ச்சியூட்டும் படியாகவோ அல்லது திடீர் திருப்பமாகவோ இல்லாமல் வெகுசாதாரணமாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் நிகழ்கிறது.

தலைப்பை பார்த்து பயந்து ஓடாமல் எல்லோரும் (வயது வரம்பிற்குட்பட்டு) பார்க்க வேண்டிய படம்.



No comments:

Post a Comment